கடல் கன்னி உடையில் பிரியங்கா சோப்ரா!

தொகுப்பு | January 29, 2020, 10:51 AM IST

DIY body wash
femina

பன்னாட்டு அளவில் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு 62-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஸ்டேபிள்ஸ் மையத்தில் நடைபெற்றது.


15 முறை கிராமி விருதினை வென்றவரான அலிசியா கீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவின் தொடக்கத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட்டுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிவப்பு கம்பளத்தில் அணிவகுத்து வந்த பிரபலங்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தனர். விழாவில் கடல் கன்னி உடையில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாசுடன் சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தார். ட்ரூத் ஹர்ட்ஸ் எனும் பாடலுக்காக சிறந்த சோலோ பெர்பார்மன்சுக்கான கிராமி விருதை வென்றவரான லிசோ, நடப்பாண்டில் அதிகபட்சமாக 8 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், 3 பிரிவுகளில் அவர் கிராமி விருதுகளை வென்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக 6 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த பில்லி எல்லிஷ், சிறந்த பாப் குரல் ஆல்பம், சாங் ஆஃப் தி இயர் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை தட்டிச் சென்றுள்ளார்.
பிகமிங் என்ற பெயரில் தனது சுயசரிதையை ஒலிப்புத்தகமாக வெளியிட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவுக்கு, “பெஸ்ட் ஸ்போக்கன் வேர்டு” என்ற பிரிவில் கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற பாடகியான லேடி காகா, விசுவல் மீடியாவில் சிறந்த பாடலை எழுதியதற்காக கிராமி விருதை பெற்றுள்ளார். கடந்த ஆண்டும் இதே பிரிவிலும், சிறந்த பாப் இரட்டையர் மற்றும் குழு பெர்பார்மன்சுக்கான கிராமி விருதுகளை வென்றவரான லேடி காகா, இம்முறை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. கிராமி விருது விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா இந்த குடும்பத்தில் இருப்பதில் பெருமையடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் நடந்த கிராமி விருது விழாவில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த கூடைப்பந்து வீரர் கோப் பிரையண்டிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது ஜெர்சி எண்ணான 24 தனது விரல் நகத்தில் பிரியங்கா சோப்ரா எழுதியுள்ளார். பிரியங்கா சோப்ராவின் இந்த ஒளிப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.